ஹைதராபாத்:ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்ற மக்களவைக்கும் நாளை மறுதினம் (மே 13) தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோன்று தெலங்கானா மாநிலத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் அன்றைய தினமே நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலையுடன் (மே 11) ஓய்ந்துள்ள நிலையில், தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான வெங்கடேஷ் மற்றும் அல்லு அர்ஜுனா இரு மாநிலங்களிலும் சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ஆந்திர மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா, பாஜக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதேபோல, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதி, பாஜக என தெலங்கானாவிலும் மும்முனைப் போட்டி காணப்படுகிறது.
தேர்தல் களத்தில் நிலவும் இதுபோன்ற கடுமையான போட்டியில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் பல்வேறு உத்திகளைக் கையாளுவது வழக்கம். இந்த உத்திகளில் ஒன்றுதான் லட்சக்கணக்கான ரசிகர்களை தங்கள் வசம் வைத்துள்ள திரை பிரபலங்களை தங்களின் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ளும்படி செய்வது. முன்னணி நட்சத்திரங்கள் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரங்கள் பெரும்பாலும் ஏதேனு மொரு கட்சியைச் சார்ந்துதான் இருக்கும்.
காங்கிரஸ், தெலுங்கு தேசத்துக்கு ஆதரவு:ஆனால், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளரான ராமசகாயம் ரகுராம் ரெட்டியை ஆதரித்து அண்மையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கம்மம் தொகுதியில் போட்டியிடும் ராமசகாயம் ரகுராம் ரெட்டி, வெங்கடேஷுக்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதேசமயம் ஆந்திர மாநில பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரான காமினினி சீனிவாசை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். கைகலூரு தொகுதியில் போட்டியிடும் இவர், நடிகர் வெங்கடேஷ் மனைவியின் நெருங்கிய உறவினராவார். ஆக, தெலங்கானாவில் காங்கிரஸுக்கு ஆதரவாகவும், ஆந்திராவில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகவும் இருதரப்புக்கும் பாரபட்சம் இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் செய்து முடித்துள்ளார் வெங்கடேஷ்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜகவுக்கு ஆதரவு: வெங்கடேஷ் பாணியிலேயே மற்றொரு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனும் பிரச்சாரம் செய்துள்ளார். ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரான ஷில்பா ரவி ரெட்டிக்கு ஆதரவாக அண்மையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் முன்னதாக, பாஜக கூட்டணியில், பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜனசேனா கட்சியின் தலைவரும், தமது மாமாவுமான பவண் கல்யாண் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று அண்மையில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அல்லு அர்ஜுன்.
இதனால், அவரது ஆதரவு ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கா, பாஜக கூட்டணிக்கா என்ற குழப்பம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது., இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, " நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். எனது நண்பனுக்காக உதவுகிறேன்" என்று சேஃப்பாக பதிலளித்தார்.
ரஜினி தான் முன்னோடி:இப்படி உங்களுக்கும் வேண்டாம்; எங்களுக்கும் வேண்டாம் என்பது போல, எதிரெதிர் கட்சியினருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர் தெலுங்கின் இரு முன்னணி நட்சத்திரங்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், 2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவுக்கு ஆதரவளித்திருந்தார். அதேசமயம் திமுக கூட்டணியை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. எனினும், அக்கூட்டணியில் பாமக போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் அக்கட்சியை தமது ரசிகர்கள் ஜனநாயக முறையில் எதிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 2002 -இல் பாபா திரைப்படம் வெளியானபோது, பாமகவினர் அப்படத்தைப் பார்க்கக்கூடாது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்ததற்குப் பதிலடியாக, 2004 தேர்தலின்போது பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டை ரஜினி எடுத்திருந்தார்.
இதையும் படிங்க:ஐஏஎஸ் ராஜினாமாவை திரும்பப் பெற்றார் அனிஷ் சேகர்.. பசுமை ஆற்றல் கழக நிர்வாக இயக்குனராக நியமனம்! - ANEESH SEKAR IAS REJOINED