அமராவதி: 175 சட்டப் பேரவை தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டமன்றத்திற்கு மக்களவையுடன் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து நேற்று (ஜூன்.12) ஆந்திர பிரதேச முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெபி நட்டா, நிதின் கட்காரி, தர்மேந்திர பிரதான், சிராஜ் பஸ்வான், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர்கள் பாலகிருஷ்ணா, ரஜினிகாந்தி, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஆந்திர பிரதேசம் முதலமைச்சராக தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடு இன்று (ஜூன்.13) பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்பை முன்னிட்டு தலைமை செயலகத்தில் மந்திர ஓதங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மாநில அரசின் தலைமைச் செயலாளர் நிரப்குமார் பிரசாத், மாநில அமைச்சர்கள் அச்சன்நாயுடு, கொள்ளு ரவீந்திரா, நிம்மலா ராமாநாயுடு, பையாவுலா கேசவ், சத்யகுமார் யாதவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.