வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் பேலுபூர் பகுதியில் உள்ள பதானி பவர் ஹவுஸ் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தன பேலுப்பூர் போலீசார், உயிரிழந்து கிடந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து போலீசார் அளித்த தகவலின் படி உயிரிழந்தவர்கள், ராஜேந்திர குப்தாவின் மனைவி நீது (45) மற்றும் மகன் நவேந்திர குப்தா (25), சுபேந்திர குப்தா (15) மற்றும் மகள் கவுரங்கி (16) என்பது தெரியவந்துள்ளது. இவர்களை ராஜேந்திர குப்தா தான் துப்பாக்கி சுட்டுக் கொன்றுவிட்டு, சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திர அவரது இளைய சகோதரர் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவியைக் கொன்ற வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு, தனது தம்பி மற்றும் அவரது மனைவியை ஒரே வீட்டில் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, அவரது தந்தை லக்ஷ்மி நாராயண மற்றும் அவருடன் வசித்து வந்த இரண்டு காவலர்களும் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் கூறுகையில்,"ராஜேந்திர குப்தாவிற்கு 5 முதல் 7 வீடுகள் உள்ளன. இதன் மூலம் வரும் வாடகை மட்டுமே அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கிடைக்கிறது. இருப்பினும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தினமும் ராஜேந்திர தகராறு செய்து வந்தார்.
மேலும் அவர் ஜோதிடத்தை அதிக நம்பி வந்தார். இந்தநிலையில்,"குற்றம்சாட்டப்பட்ட நபர் செய்யும் பணிகளுக்கு அவரது மனைவி தடையாக இருப்பார் என ஜோதிடர் ஒருவர் ராஜேந்திர குப்தாவிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் கூட அவர் கொலை செய்து இருக்கக் கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் விசாரணையில் முடிவில் தான் கொலைக்கான உண்மையான காரணம் என்ன, என்பது தெரியவரும். ஒரே உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.