ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது நாரையூரணி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த மறைந்த செந்தூரப்பாண்டி என்பவரது மனைவி லட்சுமி. இவர் சம்பவத்தன்று மாலை தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
இதனையறிந்த மர்ம நபர்கள் அவரின் வீட்டுக்குச் சென்று அவரை கடுமையாக அடித்து தாக்கி, அவர் கழுத்தில் கிடந்த செயினை பறித்துக் கொண்டு கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பின்னர் மூதாட்டி இறந்ததை உறுதி செய்த அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உச்சப்புளி காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அமைந்தகரை சிறுமி கொலை; 'இந்த மரணத்தை தட்டி விட்டு போக முடியாது' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி லட்சுமி அணிந்திருந்தது தங்க நகை இல்லை என தெரிய வந்துள்ளது. ஆனால், அதை தங்கம் என நினைத்து பறித்து சென்றது மட்டுமின்றி, மூதாட்டிய இரக்கமின்றி கொன்றுள்ளது அந்த கும்பல். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.
சமீப நாட்களாக மண்டபம் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து தாக்கி, தங்க நகைகளை கொள்ளையடித்துச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு மூதாட்டிகளை இதுபோல தாக்கி, நகைகளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். அதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். தொடரும் மூதாட்டிகள் படுகொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்