டெல்லி: தலைநகர் டெல்லியில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில், அரியானா, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி டெல்லி ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
நடப்பாண்டில் டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீர் பங்கை அரியானா இதுவரை திறந்துவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஒரு மாதத்திற்கு கூடுதலான தண்ணீரை விடுவிக்குமாறு கோரியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி குடிநீர் அமைச்சர் அதிஷி, டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை அரியானா திறந்து விடாமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், டெல்லி ஜல் போர்டில் மத்திய நீர் டேங்கர் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருவதாகவும், அது ஐஏஎஸ் அதிகாரியால் கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். தலைநகர் டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கும் நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாகவும், இயல்பை விட 2.8 டிகிரி அதிகமாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது! - Prajwal Revanna Arrest