டெல்லி:18வது மக்களவைத் தேர்தலின் நிறைவுக் கட்டமான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன்.1) நடைபெறுகிறது. பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேலும், ஒடிசா மாநில சட்டப்பேரவையின் மீதமுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் 6 கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இதில் 486 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது. இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பிற பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெப்பம் அல்லது மழை அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ப ஏற்பாடுகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.