டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு ஏர் கனடா விமான நிறுவனத்தின் விமானம் பறக்க தயாராக இருந்தது. இந்நிலையில், அந்த விமானத்திற்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் ஏதோ ஒரு பகுதியில் வெடிகுண்டு பொருத்தப்பட்டுள்ளதாக அந்த மிரட்டல் இமெயிலில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நீண்ட நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரிய வந்ததாக கூறப்பட்டுள்ளது. நேற்று (ஜூன்.5) இரவு 10.50 மணியளவில் ஏர் கனடா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிரட்டல் மின்னஞ்சல் கிடைத்ததும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும், இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து ஏர் கனடா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக டெல்லி விமான நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூன் 1ஆம் தேதி சென்னையில் இருந்து மும்பைக்கு 172 பயணிகளிடன் செல்ல இருந்த இண்டிகோ நிறுவனத்தின் விமானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், உடனடியாக மும்பை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜூன் 8ல் பிரதமராக மோடி பதவியேற்பு? இந்தியா கூட்டணியின் திட்டம் என்ன? - PM Modi Swearing Ceremony Date