கோயில் கருவறைக்குள் நுழைவாயா?.. இளைஞரை அடித்து துவைத்த பூசாரி..! - திருப்பூர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருப்பூர்: மங்கலம் சாலை, பூச்சக்காட்டிலுள்ள செல்வ விநாயகர் கோயிலில் இன்று (05.08.2023) கோயில் கருவறைக்குள் புகுந்த இளைஞர் உள்ளே ஒளிந்து கொண்டார். இதனைப் பார்த்த கோயில் பக்தர்கள் மற்றும் பூசாரிகள், அந்த இளைஞரை வெளியேற்ற முயற்சித்தனர். ஒரு கட்டத்தில் பூசாரி ஒருவர் இளைஞரை வெளியே இழுத்து வந்து கீழே தள்ளி அடித்து துவைத்தார்.
கையில் வைத்திருந்த வெண்கல மணியால் கடுமையாக தாக்கிய பூசாரி, எவ்வளவு தைரியம் இருந்தால் கருவறைக்குள் நுழைவாய் எனக் கூறி தாக்கினார். நிலைகுலைந்த நிலையில் படுத்து கிடந்த அந்த இளைஞரின் மீது காலை வைத்து அழுத்திய பூசாரி, தாக்குவதற்கான எல்லா உரிமையும் தனக்கு இருப்பதைப் போல நடந்து கொண்டார்.
அப்போது மன்றாடிய அந்த இளைஞர் சிலர் தன்னை வெட்ட வருவதாகவும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே கடவுளின் கருவறைக்குள் புகுந்ததாகவும் கூறினார். பூசாரிக்கு துணையாக இருந்தவர்களோ அதையெல்லாம் கேட்காமல், உயிரே போனாலும் கருவறைக்குள் போய் விடுவாயா? அதற்கு உனக்கு தகுதி இருக்கிறதா என கேள்வி எழுப்புவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தினர் திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். கோயிலுக்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் கோகுல் என்பதும், அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த நபரின் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் வெட்ட வந்ததாகக் கூறி கோயிலினுள் வந்து ஒளிந்து கொண்டதாகவும் தெரிய வந்தது. உயிரைக் காப்பாற்ற கடவுளின் கருவறைக்குள் புகுந்த நபரை, பூசாரியே கொலைவெறியோடு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோயில் குடியிருப்புவாசிகள் சிலரால் நிர்வாகிக்கப்படும் தனியார் கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழும் வராது. பழமையான கோயில் இல்லை என்பதால் ஆகம விதிகளுக்கு உட்பட்டதும் இல்லை என ஆன்மிகவாதிகளும் கருத்து தெரிவிக்கின்றனர்.