சர்வதேச யோகா தினம்: அண்ணாமலை பல்கலை.யில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு! - annamalai university
🎬 Watch Now: Feature Video
கடலூர்: சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடுவதை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் யோகா நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டு யோகா பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வியியல் விளையாட்டு மைதானத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது. இந்த யோகா தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று இங்கு யோகா செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிதம்பரத்திற்கு வருகை தந்தார். இவரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். அதிகாலையில் பல்கலைக்கழக உடற்கல்வி மைதானத்தில் வைத்து நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தனது மனைவி லட்சுமி உடன் பங்கேற்றார், ஆளுநர். அதுமட்டுமில்லாமல் மாணவர்களுடன் ஆளுநரும், அவரது மனைவியும் யோகா பயிற்சி செய்தனர்.
முதலில் யோகா செயல் விளக்க நிகழ்ச்சியும், யோகா தொடர்பான செயல் விளக்கவுரையும் நடைபெற்றது. மேலும் உலக சாதனை யோகா மாணவி சுபானுவின் 108 சிவதாண்டவம் நிகழ்ச்சி நடைபெற்றது. யோகாவில் 133 திருக்குறள் அதிகார யோகா விளக்கம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து யோகா நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
மேலும் சுமார் 8:30 மணிக்கு ஆளுநர் உரையாற்றினார். இதனையடுத்து விருந்தினர் மாளிகைக்கு சென்ற ஆளுநர் மாலை சுமார் 3 மணி அளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, வள்ளலார் பிறந்த இடமான மருதூருக்குச் சென்று அங்கு வள்ளலாருக்கு உள்ள கோவிலில் தரிசனம் செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி கிராமத்திற்குச் சென்று பார்வையிடுகிறார். பின்பு கருங்குழி கிராமத்தில் இருந்து மேட்டுக்குப்பம் கிராமத்திற்குச் சென்று அங்கு வள்ளலார் சித்தி அடைந்த இடத்தைப் பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் பார்வையிட்டு தரிசனம் செய்யும், தமிழக ஆளுநர் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் வள்ளலார் 200 நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.