அண்ணன் வறார் வழிய விடு.. நாயை விரட்டிய 'படையப்பா' யானை - வைரலாகும் வீடியோ!
🎬 Watch Now: Feature Video
தேவிகுளம் (கேரளா): கேரள மாநிலம் மூணாறு பகுதிகளில் 'படையப்பா' என்று அழைக்கப்படும் பிரபல காட்டு யானை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொச்சி-தனுஷ்கோடி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் உலா வந்தது. அதனைத் தொடர்ந்து, படையப்பா யானை அப்பகுதியில் இருந்த அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
அதனை அடுத்து, அதிகாலை நேரத்தில் மீண்டும் தேசிய நெடுஞ்சாலை பகுதியை நோக்கி வந்தது. அப்போது, அப்பகுதி மக்கள் காட்டு யானையின் ஆபத்தை உணராமல், அவர்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர், யானை வருவதைக் கண்ட மக்கள், அங்கிருந்து பதறி அடித்து ஓடினர்.
அதன் பின்னர், சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்த 'படையப்பா' யானையைப் பார்த்து குறைத்துக் கொண்டிருந்த நாயை, பிளிறியபடி விரட்டி அடித்தது. யானை பிளிறிய சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் திகைத்து நின்றனர். பின்னர், எவ்வித அசம்பாவிதத்தையும் ஏற்படுத்தாமல் யானை வனப்பகுதிக்குள் சென்றது.
பிரபல 'படையப்பா' என்று அழைக்கப்படும் காட்டு யானை நெடுஞ்சாலையை கடந்து செல்லும் காட்சிகள், அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.