காலி மது பாட்டிலுக்கு கிடைக்கும் விலை கூட தேங்காய்க்கு கிடைப்பதில்லை - விவசாயிகள் வேதனை! - விவசாயிகள் சங்க தலைவர்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: தென்னை விவசாயம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நேற்று தேங்காய், இளநீர் மற்றும் மது பாட்டில்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் வழங்கப்பட்ட இந்த மனுவில், பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தென்னை சார்ந்த தொழில்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
தேங்காய்களின் மதிப்பை அதிகரிக்கும் விதமாக அரசாங்கமே தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்து மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
தென்னையை பாதிக்கக்கூடிய நோய்கள் பரவாமல் அதனை கட்டுப்படுத்தும் விதமாக தொடர் நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமின்றி நோயால் பாதிக்கப்பட்டு பட்டுப்போன தென்னை மரங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் தென்னை நல வாரியம் அமைத்திட வேண்டும் எனவும் பொள்ளாச்சியை மையமாக வைத்து தேங்காய் கொள்முதல் மையம் அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மனு அளிக்க வந்த விவசாயிகள் சங்கத்தினர் காலி மது பாட்டில்களுக்கு கிடைக்கின்ற விலை கூட தேங்காய்க்கு கிடைப்பதில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் கையில் தேங்காய், இளநீர், மட்டுமல்லாது காலி மது பாட்டில்களையும் எடுத்து வந்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.