சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர்கள் (Pharmacist) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டி.பார்ம் (D. Pharma), பி.பார்ம் (B. Pharma) முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் நிரப்படுகிறது. இந்த பதவிகளுக்கு பதிவு செய்ய 2 பிப்ரவரி 2025 தேதி படி, டி.பார்ம், பி. பார்ம் முடித்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் (Tamil Nadu Pharmacy Council) பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் மருந்தாளுநர்கள் அனைவரும் வருகிற ஜூலை 1, 2025 ஆம் தேதி படி, அனைத்து தரப்பினருக்கும் குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.
பிரிவு | வயது வரம்பு (அதிகபட்சம்) |
எஸ்சி (SC), எஸ்டி (ST), எம்பிசி (MBC), டிஎன்சி (TNC) | 59 |
ஓசி (OC) | 32 |
மாற்றுத்திறனாளிகள் | 42 |
முன்னாள் ராணுவத்தினர் | 50 |
சம்பளம்:
மருந்தாளுநர்களாக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.35, 400 - ரூ.1,30, 400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு (Online Registration) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, டிஏபி(பிஎச்)- DAP(PH) பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். மேலும், இது குறித்த அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணபிக்கும் தேதி:
விண்ணப்பம் | தேதி |
விண்ணப்பம் தொடக்கம் நாள் | 17 பிப்ரவரி 2025 |
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி (ஆன்லைன் பதிவு மற்றும் ஆன்லைன் கட்டணம்) | 10 மார்ச் 2025 |
தேர்வு | பின்னர் அறிவிக்கப்படும் |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்கு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு நேர்காணல் (Interview) கிடையாது. இதில், தமிழ் தகுதி மொழிதாள் மற்றும் பாடத்திற்கான தாள் என இரண்டு தாள்கள் இடம்பெறும்.
இதையும் படிங்க: இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்துக்கு ஆட்தேர்வு; பிரதமர் மோடி-எலான்மஸ்க் சந்திப்பை தொடர்ந்து வந்த அறிவிப்பு! |
மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும், இதர பிரிவினர் 35 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தமிழ் தகுதி தாளில் தேர்ச்சி பெற 40 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை மற்றும் தேர்விற்கான பாடத்திட்டம் ஆகிய விவரங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.