வால்பாறையில் கனமழை:ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு! - தென்மேற்கு பருவமழை
🎬 Watch Now: Feature Video
கோவை: வால்பாறைப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் இன்று(05.07.2023) காலை முதலே கன மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறைப் பகுதிகளில் உள்ள கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலைப்பகுதியில் உள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
தனியார் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கடும் மழையிலும் வேலைக்குச் சென்று வருகின்றனர். மேலும், கன மழை காரணத்தால் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வால்பாறைப் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வால்பாறையின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் சின்ன கல்லார் பகுதியில் கனமழை பெய்து வருவதாகவும்; அப்பகுதியில் இன்று காலை நிலவரப்படி 7.5 செ.மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இதனால் வால்பாறைப் பகுதியில் கனமழை காரணமாக பேரிடர் மீட்புக்குழு தீவிரப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போல், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலைப் புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகம், ஆழியார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் ஆழியார் அணையை ஒட்டி உள்ள கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கத்தினாலும் வறட்சியினாலும் கவியருவி மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது சக்தி எஸ்டேட், தல நார் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கவி அருவியில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கவியருவியில் மீண்டும் தண்ணீர் வருவதனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.