ராணிப்பேட்டையில் தரைப்பாலங்களை மூழ்கடித்து ஓடும் தண்ணீர்... தடை செய்யப்பட்ட போக்குவரத்து! - சிறுணமல்லி கல்லாற்று தரைப்பாலம்
🎬 Watch Now: Feature Video
Published : Dec 4, 2023, 3:03 PM IST
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்த நிலையில் இன்று (டிச.4) அதிகாலையும் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக பெருவளையம் - தச்சம் பட்டறை செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் முயற்சியில், நெமிலி வட்டாட்சியர் பாலச்சந்தர் தலைமையில் பாலத்தின் குறுக்கே முட்செடிகளை போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும் ஆற்று பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டு உள்ளது என்று கூறும் விதமாக நெடுஞ்சாலை துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதேபோன்று நெமிலியிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சிறுணமல்லி கல்லாற்று தரைப்பாலத்திலும் தண்ணீர் செல்வதால் அங்கும் நெடுஞ்சாலை துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதே நேரம் இங்கு போக்குவரத்துக்கு தடை செய்யப்படவில்லை.
அதீத மழையின் காரணமாக நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட பனப்பாக்கம், துறையூர், சிறுவளையம், நெல்வாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 4 பேரின் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் பகுதியாக இடிந்து சேதமடைந்தது. தொடர் மழை சேதங்களை கண்காணிக்க அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் தலைமை இடத்தில் தங்கி இருந்து சேத விவரங்களை உடனுக்குடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தாழ்வான இடங்களில் தேங்கி நின்ற மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.