TN Budget 2023: மகளிருக்கான உரிமைத்தொகை அறிவிப்புக்கு குடும்பத் தலைவிகள் வரவேற்பு! - tamilnadu budget news 2023
🎬 Watch Now: Feature Video
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில் ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பட்ஜெட் கூட்டத் தொடரில் மகளிர் உரிமைத் தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் கால தாமதமாக வழங்கப்படும் உதவித்தொகை என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த உரிமைத்தொகை குறித்து குடும்பத்தலைவிகள் கூறுகையில், 'மகளிருக்கான உரிமைத்தொகை மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது உள்ள விலைவாசி உயர்வில் ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய உதவியாக இருக்கும். மேலும் கேஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் குடும்பத்தின் செலவுகளை சமாளிக்கவும், பிள்ளைகளின் கல்வி மற்றும் மேல் படிப்பிற்கு சேமிப்பாகவும் இந்த உரிமைத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற ஓரளவு இந்த தொகை உதவியாக இருக்கும்; இந்த அறிவிப்புக்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி' கூறுவதாக பல குடும்பத்தலைவிகள் தெரிவித்துள்ளனர்.