தக்காளிகளை சாலையோரத்தில் கொட்டிச் சென்ற விவசாயிகள்.. உரியவிலை தராத வியாபாரிகளால் விரக்தி!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: வீழ்ச்சியான தக்காளி விலையால் மன உளைச்சல் அடைந்த செங்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அதனை சாலையோரம் கொட்டிச்சென்ற சோகம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் ஜீவா ஆகிய விவசாயிகள் எடுத்துச்செல்லும் தக்காளியை இடைத்தரகர்கள் மூன்று ரூபாய்க்கு வாங்கி, அதனை 50 ரூபாய்க்கு வெளிசந்தைகளில் விற்று அதிக லாபம் ஈட்டி வருவதாகத் தெரிகிறது.
இதனால் பாதிப்படைந்த இந்த இரு விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டு மூன்று மாதங்கள் பாதுகாத்து அறுவடை செய்த தக்காளியை அடிமாட்டு விலைக்கு கொடுப்பதை விட, கால்நடைகளுக்கே உணவாக தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டிச் சென்ற சம்பவம் காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இவ்வாறு உடல் உழைப்பால் விளைநிலங்களில் விளைவித்த தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கொள்முதல் செய்வதில் மாவட்ட வேளாண் துறை அலுவலர்கள் தலையிட்டு, உரிய விலையினை நிர்ணயித்து, விவசாயிகளுக்கு ஆதாரவிலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.