திருமணம் கைகூடும் திருமணஞ்சேரி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில், பிரசித்திபெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல் பெற்ற இந்த கோயிலில் சிவன், கல்யாண சுந்தரேஸ்வரராக எழுந்தருளி, கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகிறது.
இதனால் திருமணத் தடை உள்ளவர்கள், நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமணப் பிரார்த்தனையில் பங்கேற்று, அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோயிலில் மாசிமகப் பெருவிழா கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தினந்தோறும் சுவாமி புறப்பாடு, வீதியுலா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 9ஆம் திருநாளாம் முக்கிய விழாவான இன்று (மார்ச் 5) திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் ராஜ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து அவர் கோயில் வளாகத்தைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சிறப்பு ஹோமம் மற்றும் மகா பூரணாஹூதி செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், சிவ கைலாய வாத்தியங்கள் மற்றும் வாணவேடிக்கை ஆகியவை முழங்க சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தேங்காயை உடைத்து வழிபட்டனர். கோயில் நிர்வாகிகள் உள்பட பக்தர்கள் வடம்பிடித்த இழுத்த இந்த திருத்தேர், நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்தது.
அந்த நேரத்தில் வீடுகள்தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். மேலும் நாளை (மார்ச் 6) முக்கிய விழாவாக தீர்த்தவாரி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.