நெல்லுக்கான ஆதாரவிலை குறித்த அறிவிப்பு இல்லை - தஞ்சை விவசாயிகள் கவலை! - Thanjavur farmers opinion
🎬 Watch Now: Feature Video
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று (மார்ச் 21) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2023 - 2024ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கையில், ''சிறு தானிய இயக்கத்திற்கு 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறோம். அதேபோல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 230 கோடி ரூபாய் 2,504 கிராம ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிர் காப்பீட்டிற்கு காப்பீட்டு கட்டண மானியம் அரசின் பங்களிப்பாக 2,337 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் விருதும், 5 லட்சம் ரூபாய் ரொக்கத் தொகையும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆகியவை வரவேற்கத்தக்கது. அதேநேரம், தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு, விவசாயிகளுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த கஜா புயலினால் தென்னை மரம் அடியோடு சாய்ந்ததில், தஞ்சை மாவட்ட தென்னை விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டனர். தென்னை விவசாயத்திற்கு 20 கோடி ரூபாய் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினால் மட்டுமே, தென்னை விவசாயத்தைக் காப்பாற்ற முடியும். எனவே, இதனை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயை ஆதாரவிலையாக விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், அந்த அறிவிப்பு இல்லை. அது பெரிய ஏமாற்றமாக உள்ளது.
உரங்கள், இடுபொருட்கள் செலவு, கூலி, டீசல் விலை ஆகியவை உயர்ந்துள்ளது. தஞ்சை மாவட்டம், திருவையாறு வாழை, வெற்றிலை ஆகியப் பயிர்களை சந்தைப்படுத்துவதற்கு விற்பனை நிலையத்தை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அந்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு 195 ரூபாய் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. உர செலவு அதிகரித்துள்ளதால், உற்பத்தி பொருட்களுக்கான கட்டுப்படியான விலையை அறிவித்தாலே போதும். இதற்கு மானியம் தேவையில்லை. இந்த நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்குப் பாதிப்பாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது” எனத் தெரிவித்தனர்.