பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு வெல்லம் தர வேண்டும் - தஞ்சை விவசாயிகள் கோரிக்கை!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: தைப்பொங்கலை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பினை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அந்த பொங்கல் தொகுபில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கரும்புகளை அரசே நேரடியாக விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் கூறுகையில், “ தமிழக மக்களுக்கு மாநில அரசு, வழக்கம்போல வழங்க முடிவு செய்துள்ள பொங்கல் தொகுப்பில், இவ்வாண்டு பச்சையரிசி, செங்கரும்பு மற்றும் சர்க்கரை வழங்க திட்டமிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆனால் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு வெல்லம் என்கிற அச்சு வெல்லம், ஒரு செங்கரும்பிற்குப் பதிலாக இரு செங்கரும்புகள், ரூபாய் ஆயிரம் என்பதனை ரூபாய் 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அத்துடன், செங்கரும்புகளை அரசே நேரடியாக விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டைப்போல ஒரு செங்கரும்பிற்கு ரூபாய் 33 வழங்காமல், அதனை ரூபாய் 40 ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை” என தெரிவித்தார்.