New Parliament Building: புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க தமிழக ஆதீனம் குழு டெல்லி பயணம்!
🎬 Watch Now: Feature Video
சென்னை: டெல்லியில் 970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28ஆம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனைத் திறந்து வைக்கிறார். இது தொடர்பாக நேற்று(மே.24) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த செங்கோல் கடந்த 1947ஆம் ஆண்டு நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தபோது, ஆட்சி அதிகாரத்தை ஆங்கிலேயர்களிடமிருந்து பெறும்போது நேருவிடம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருவாடுதுறை ஆதீன சுவாமிகள் இந்த செங்கோலை நேருவிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து ஆதினம் குழுவினர் நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ளனர். திருவாடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்களைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு, நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றது. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில், ஆதீனம் குழு பிரதமரிடம் செங்கோலை வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி - டெல்லி திரும்பிய பிரதமர் மோடி பேச்சு