பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட மண் சாலை.. 15 கி.மீ சுற்றி செல்லும் அவலம்! - vellore news
🎬 Watch Now: Feature Video
Published : Sep 26, 2023, 6:09 PM IST
வேலூர்: குடியாத்தம் அடுத்த மேல் ஆலந்தூரில் இருந்து அகரம்சேரி செல்ல பாலாற்றுக்கு இடையே கிராம மக்களால் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இன்று காலை அந்த மண் சாலை பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் மேல் ஆலந்தூர் கொத்தகுப்பம், பட்டு, கூட நகரம், பீமாபுரம், அலங்காநல்லூர், ஆலாம்பட்டறை
உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளிகொண்டா மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல 15 கி.மீ. சுற்றிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பல முறை இந்த தற்காலிக மண் சாலை அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனால் தினந்தோறும் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் மற்றும் காலணி தொழிற்சாலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அகரம்சேரி உள்ளிட்ட கிராம மக்களுக்கான அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்டவை பாலாற்றுக்கு மறுபுறம் அமைந்துள்ளதால், 1 கி.மீ. தொலைவுக்கு சுமார் 15 கி.மீ. வரை சுற்றி கடக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதனையடுத்து அகரம்சேரி, மேல் ஆலந்தூர் இடையே பாலாற்றில் நிரந்தரமாக தரைப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.