Insta Reels விபரீதம்..! தலகோணா அருவியில் டைவ் அடித்த இளைஞர் பாறையில் சிக்கி உயிரிழப்பு - ராஜீவ் காந்தி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
🎬 Watch Now: Feature Video
திருப்பதி: கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் சுமந்த் (23). இவர், சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி கல்லூரியில் படித்து வந்தார். சென்னையிலேயே அறையெடுத்து தங்கிவந்தார். இந்நிலையில், ஜூன் 30ஆம் தேதி இவர் தனது நண்பர்களுடன் ஆந்திர மாநிலம், திருப்பதியிலுள்ள தலகோணா நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளார்.
அங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்தபோது சுமந்த் தனது நண்பர்களிடம், தான் அருவியில் குதிப்பதை வீடியோ எடுக்குமாறு கூறிவிட்டு பாறையில் இருந்து குதித்தார். தண்ணீரில் குதித்த சுமந்த் கீழே இருந்த பாறையில் சிக்கிக்கொண்டார். அதிலிருந்து மீண்டு வர போராடியும் அவரால் இயலவில்லை.
இதனை சற்றும் எதிர்பாராத சுமந்தின் நண்பர்கள் உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் உதவி கேட்டு நாடினர். இருந்தபோதிலும், சுமந்தை காப்பாற்ற இயலிவில்லை. உடனடியாக அவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சுமந்தை மீட்க முயன்றனர். இரவு நேரம் ஆனதால் அவரை மீட்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 01) நீரில் மூழ்கிய சுமந்தை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, அவரது சடலத்தை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், இந்த தலகோணா நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து இதுபோன்ற துயர சம்பவங்கள் நடந்து வருவதாகவும், இதுவரை மூன்று இளைஞர்கள் இதேபோல் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சில இளைஞர்கள் தடையை மீறி இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் மனைவியை கழுத்து நெரித்துக்கொலை செய்த கணவர் கைது!