மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்! - ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 18, 2024, 11:09 AM IST
|Updated : Jan 18, 2024, 12:25 PM IST
செங்கல்பட்டு: தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வருகிறது. மற்ற தலங்களில் நடைமுறையில் இல்லாத பழக்கம் இக்கோயிலில் உண்டு. அதாவது, இக்கோயிலில் யார் வேண்டுமானாலும் பூஜை மற்றும் அபிஷேகங்கள் செய்து அம்மனை வழிபடலாம். ஆதலால், இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவர்.
வருடாவருடம் தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வருகை தந்து வழிபட்டுச் செல்வர். அதேபோல், இந்த வருடமும் தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டிகை இங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் 84-வது அவதாரத் திருநாள், மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்தநாள் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 161-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் ஒருங்கே கொண்டாடப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் ஓட்டப் பந்தயம், நடை ஓட்டம், குண்டு எறிதல், கபடி, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர்.
மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அகத்தியன் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த நிலையில், விழாவுக்கு ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தார். பின்னர், அவர் குழந்தைகள் உடன் நடனம் ஆடினார். பின், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களும், கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.