வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்.. அடிப்படை வசதி செய்து தராததை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்..! - salem people suffer due to Domestic sewage
🎬 Watch Now: Feature Video
சேலம் மாநகராட்சி 57ஆவது வார்டுக்கு உட்பட்ட புலிக்கார தெரு, ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் சாக்கடை மற்றும் சாலை வசதிகள் இல்லாமல் கடந்த 20 வருடங்களாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீருடன் கழிவு நீரும் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடமும் திமுக கவுன்சிலர் சீனிவாசனிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வேதனையடைந்த அப்பகுதி மக்கள் இன்று (ஜூலை 2) வழக்கறிஞர் சங்கர் தலைமையில், அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த செவ்வாபேட்டை காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கவுன்சிலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: பீட் பணம் கொடுக்கலைனா அவ்வளோ தான்..! கொள்ளையரிடம் கறார் காட்டிய தலைமைக் காவலர்
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதி முழுவதும் சாலையில்லாமலும் சாக்கடை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் நிலைகுறித்து பலமுறை திமுக கவுன்சிலர் சீனிவாசன் என்பவரிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது உடனடியாக சரி செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்த அவர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்களை ஏமாற்றி விட்டார்.
இதுவரை அவர் எங்கள் பகுதியை எட்டிக் கூட பார்க்கவில்லை. தற்போது மழை பெய்ததின் காரணமாக வீடுகளில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர் வீட்டிற்குள் புகுந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர் நோய்வாய்ப்பட்டு அவதியுற்று வருகின்றனர்.
வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக இந்த பகுதியில் சாக்கடை மற்றும் சாலை வசதிகளை செய்து தர வேண்டும்” என தெரிவித்தனர். அவ்வாறு செய்து தரவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும்” கூறினர்.
இவ்வாறு அடிப்படை வசதி செய்துத் தராத திமுக கவுன்சிலரை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தில் சாந்தி செய்த திருட்டு வேலை - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தி.நகர் போலீசார்!