’ரெண்டு நாளா கரண்ட் இல்ல’.. கிராமத்தினர் சாலை மறியலால் பரபரப்பு - 48 மணி நேர மின் தடை
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டம் நாசரேத்பேட்டையில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சிறிய காற்று வீசினாலும், லேசான மழை பெய்தாலும் 2 முதல் 5 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தொடர்ந்து 48 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதாகவும், மேலும் நச்சுப் பூச்சிகளின் தொல்லை அதிகமாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, உடனடியாக தங்கள் பகுதிக்கு மின்சாரத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் மின்சாரத் துறையிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சாலை மறியல் போராட்டம் நீடித்தது.
இதனால் திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாகன ஓட்டிகள் வழிவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகம், நாளை முதல் மின்சாரம் சரியாக வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தது. இதனை ஏற்ற கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.