சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. ஒரே நாளில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!
🎬 Watch Now: Feature Video
கேரளா: பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், கேரளா மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருகை தருகின்றனர்.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய யாத்திரை தலங்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடையானது நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டு, டிசம்பர் 25ஆம் தேதி வரை சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இக்கோயிலில் நடைபெறும் மண்டல கால பூஜை, மகர விளக்கு, மகா உற்சவம் மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து, ஜனவரி 20ஆம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்படுகிறது. இதனால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
சபரிமலைக்கு பக்தர்கள் வருவதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்தும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூட்ட நெரிசலின் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லை என பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும், தரிசனத்திற்காக நேரடியாகவும், ஆன்லைன் முலமாகவும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், சபரிமலையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வருவதாகவும், ஒரு மணி நேரத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.