நீலகிரியில் நீர் பனியின் தாக்கம் அதிகரிப்பு... கடும் குளிரால் அப்பகுதி மக்கள் அவதி!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரு தினங்களாக காலை நேரங்களில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்ட பெட்டா, தலைகுந்தா போன்றப் பகுதிகளில் நீர்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பச்சை புல்வெளிகளில் நீர் பனித்துளிகள் படர்ந்து காணப்படுகிறது.
உதகையின் மையப் பகுதியான தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்சமாக 6.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் விளையாட்டு மைதானங்களில் உள்ள புல் தரைகளில் நீர் பனித்துளிகள் படர்ந்து காணப்படுவதால், காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பகல் நேரங்களிலேயே தீமூட்டி குளிர்காய்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளும் கடும் குளிர் காரணமாக முடங்கியுள்ளனர்.
அதிகாலைக்கு பின் படிப்படியாக வெயில் தாக்கம் அதிகரிப்பதால், நீர் பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்தது விடுகிறது. மலைப்பாதைகளில் பனிமூட்டமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளதாகவும், தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு ஊர்ந்து செல்வதாகவும் கூறுகின்றனர். இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.