கேரள சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோதல்! - கேரள சட்டப்பேரவையில் மோதல்
🎬 Watch Now: Feature Video
திருவனந்தபுரம்: கேரளாவில் கொச்சி பிரம்மபுரம் குப்பைக் கிடங்கு தீ விபத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ், நேற்று கொச்சியில் கவுன்சிலர் கூட்டத்திற்கு வந்த மேயரையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், பெண் கவுன்சிலர்களை காவலர்கள் தாக்கியதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், இன்று (மார்ச்.15) காலை சட்டப்பேரவை தொடங்கிய நிலையில், கொச்சி பிரம்மபுரம் குப்பைக் கிடங்கு தீ விபத்து குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரினர். இந்த கோரிக்கையை சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் நிராகரித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொச்சி பிரம்மபுரம் குப்பைக் கிடங்கு தீ விபத்து விவகாரத்தை கண்டித்தும், பெண் கவுன்சிலர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த முயன்றனர். இந்த மோதலில் நான்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் அலுவலகம் முன்பு ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.
இதையும் படிங்க: பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!