திருவண்ணாமலையில் சித்ராபௌர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்! - திருவண்ணாமலை கிரிவலம்
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் விழாக்களில், கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பௌர்ணமி விழா உலகப்பிரசித்தி பெற்றது. இந்த விழாக் காலங்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் சித்ரா பௌர்ணமியையொட்டி நேற்று(மே.4) இரவு முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து, கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 2,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் வருவதற்கு இலவசப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்புக்காக சுமார் 5 ஆயிரம் போலீசார் கோவில், கிரிவலப் பாதை உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரைத் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!