காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு - கிருஷ்ணகிரியில் நடுரோட்டில் மருமகனை வெட்டிக்கொன்ற மாமனார்! - Krishnagiri honor killing today
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான்கொட்டாயைச் சேர்ந்த சரண்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். எனவே, இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (மார்ச் 21) மதியம் ஜெகன், கிட்டம்பட்டியில் இருந்து தனது வழக்கமான வேலைக்காக காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ஜெகனை வழிமறித்த அவரது மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள், ஜெகனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாகத் தாக்கி உள்ளனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனிடையே சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் வரும்போது, சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவேரிப்பட்டணம் காவல் துறையினரிடம், ஜெகனின் உடலை எடுக்கவிடாமல் பொதுமக்களும், உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனால் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழரசி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சராஜ் குமார் மற்றும் தாகூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனையடுத்து உயிரிழந்த ஜெகனின் உடல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.