பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் விழா விமரிசை..! அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் சாமி தரிசனம்! - கார்த்திகை தீப திருவிழா
🎬 Watch Now: Feature Video
Published : Nov 26, 2023, 10:21 PM IST
திண்டுக்கல்: பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி முருகன் திருக்கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டும் கடந்த 20ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழாவினை முன்னிட்டு இன்று (நவ. 26) அதிகாலை 4 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். பின்னர், மதியம் 2 மணி அளவில் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மாலை 6 மணி அளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
பின்னர், பனை ஓலைகளைக் கொண்டு செய்யப்பட்டிருந்த சொக்கப்பனையும் தீயிட்டு எரிக்கப்பட்டது. கார்த்திகை தீப திருவிழாவைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். அப்போது பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் “அரோகரா அரோகரா” என கோஷமிட்டனர். முன்னதாக, பக்தர்கள் மலைக்கு மேலே செல்வதற்கு குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.