நாட்டின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், 2025-2026 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சனிக்கிழமை (பிப்.1) தாக்கல் செய்தார். பட்ஜெட் தினத்தில் நிர்மலா சீதாராமன் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதை போல, அவர் உடுத்தும் புடவை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த சேலைகளின் விவரம் பின்வருமாறு:
மத்திய பட்ஜெட் 2025: தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், பீகாரின் பாரம்பரிய கலை வடிவமான மதுபானி கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளை நிறத்திலான சேலையை அணிந்துள்ளார். சிவப்பு ரவிக்கை மற்றும் தங்க நிற பார்டர் கூடிய சேலை அனைவராலும் கவனிக்கப்பட்டது. இந்த புடவை 2021ம் ஆண்டு் பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி, நிர்மலா சீதாராமனுக்கு பரிசாக வழங்கியதோடு, பட்ஜெட் தினத்தன்று இதனை உடுத்திக்கொள்ளுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
![பட்ஜெட் 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/23449077_2025.jpg)
மத்திய பட்ஜெட் 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ஆறாவது மத்திய பட்ஜெட்டை (இடைக்கால பட்ஜெட்) தாக்கல் செய்வதற்கு, நீலம் மற்றும் க்ரீம் நிறம் கலந்த டஸ்ஸார் புடவையில் வருகை புரிந்தார். இந்த நீல நிறப் புடவை முழுவதிலும் கிரீம் நிற 'காந்தா தையல்' வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் திரிபுராவில் காந்தா புடவைகள் பாரம்பரியமாக காணப்படுகிறது.
![பட்ஜெட் 2024](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/23449077_2024.jpg)
அப்பகுதிப் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக, அவர்களின் பாரம்பரிய உடையான காந்தா தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சேலையில் இன்று நிர்மலா சீதாராமன் வந்தார். மோடி அரசின் மூன்றாவது பதவிக் காலத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் ஜூலை 23, 2024ல் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த நிர்மலா சீதாராமன் பிங்க் ரவிக்கை மற்றும் பிங்க் பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவையை அணிந்திருந்தார். இது நிர்மலா சீதாராமனின் 7வது பட்ஜெட் தாக்கலாக இருந்தது.
![பட்ஜெட் 2023](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/23449077_2023.jpeg)
மத்திய பட்ஜெட் 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஐந்தாவது பட்ஜெட் தாக்கலில், கருப்பு நிற பார்டர் மற்றும் தங்க நிற வேலைப்பாடு கொண்ட வெர்மில்லியன் (vermillion) சிவப்பு பட்டுப் புடவையை அணிந்திருந்தார். இந்தப் புடவையானது கர்நாடகாவின் தார்வாட் பகுதியைச் சேர்ந்த கையால் நெய்யப்பட்ட 'இல்கல்' பட்டுப் புடவையாகும். இந்த புடவை அப்போதைய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
![பட்ஜெட் 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/23449077_2022.jpg)
மத்திய பட்ஜெட் 2022: நிதியமைச்சர் நிர்மலா தனது நான்காவது பட்ஜெட் தாக்கலில், கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவிலிருந்து போம்காய் புடவையைத் தேர்ந்தெடுத்தார். நெகிழ்ச்சி, நம்பகத்தன்மை, பாதுகாப்பை குறிக்கும் வகையில், மிக எளிமையான மற்றும் மிருதுவான பழுப்பு நிற புடவையாக அமைந்தது. இது ஒடிசாவின், கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த போம்காய் கிராமத்தின் கைத்தறி புடவையாகும்.
![பட்ஜெட் 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/23449077_2021.jpg)
மத்திய பட்ஜெட் 2021: தனது மூன்றாவது பட்ஜெட் தாக்கலின் போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானாவின் பிரபல போச்சம்பள்ளி பட்டுப் புடவையை அணிந்திருந்தார். இந்தியாவின் பட்டு நகரத்தின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விதமாக, வெள்ளை நிற டிசைன் மற்றும் தங்க பார்டர் கொண்ட மிருதுவான மற்றும் எளிமையான சிவப்பு மற்றும் வெள்ளை நிற புடவையாக அந்த சேலை அமைந்தது.
![பட்ஜெட் 2020](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/23449077_2020.jpg)
மத்திய பட்ஜெட் 2020: 2020-2021 மத்திய பட்ஜெட் தாக்கலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நீல நிற பார்டர் கொண்ட மஞ்சள் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார். கூடுதலாக, தங்கச்செயின், வளையல்கள் மற்றும் சிறிய காதணிகளுடன் வருகை புரிந்தார். மஞ்சள் நிறம் செழிப்புடன் தொடர்பு கொண்டதால், அந்தாண்டின் பொருளாதாரம் செழிபானதாக இருக்கும் என்று அடையாளப்படுத்தி பேசப்பட்டது.
![பட்ஜெட் 2019](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-02-2025/23449077_2019.jpg)
மத்திய பட்ஜெட் 2019: 2019ம் ஆண்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இளஞ்சிவப்பு நிற மங்களகிரி புடவையில் வருகை தந்து தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தனது முதல் பட்ஜெட் தாக்கலில், நிதி அமைச்சர் தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற பட்ஜெட் டேப்லெட்டுடன் (பாஹி கட்டா) வந்தார். இந்த வகை புடவைகள், ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரியில் நெசவு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2025: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 11 மணிக்கு அறிக்கையை வாசிக்கத் தொடங்குகிறார்!