டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை (Union Budget) இன்று (பிப்ரவரி 1) சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கிய நிலையில், கூட்டத்தொடரின் முதல் கூட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இது நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றுத் தாக்கல் செய்த எட்டாவது பட்ஜெட்டாகும்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே, தெலுங்கு கவிதையை மேற்கோள்காட்டி மத்திய பட்ஜெட்டை உரையைத் நிர்மலா சீதாராமன் தொடங்கினார். அப்போது பேசிய அவர், “பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உலகின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா மாறியுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் வளர்ச்சிமயமாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் வேளாண்மை, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 6 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில், நாடு முழுவதும் 1.70 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், விவசாயிகள் அட்டைகள் மூலம் பெறுவதற்கான கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயரும் என்றும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிடுகிறார்!
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வேளாண்மைத்துறை முக்கிய அறிவிப்புகள்:
- வேளாண்மையை ஊக்குவிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் தொடங்கப்படும்.
- முதற்கட்டமாக நாடு முழுவதும் 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
- மக்கள் இடம்பெயர்வதை தடுக்க கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே. முதன்மையான நோக்கம்
- துவரம் பருப்பு மற்றும் மசூர் போன்ற பருப்பு வகைகன் உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
- பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய 6 ஆண்டுகளில் இலக்கு.
- பாசன மேம்பாடு மற்றும் விளை பொருட்களுக்கான சேமிப்பு கிடங்கு வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- நாடு முழுவதும் 1.70 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- பழங்கள் மற்றும் காய்கறிகளின் விளைச்சலை அதிகரிக்கவும் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- சிறப்பான சாகுபடிக்கு தேவையான விதைகளை நாடு முழுவதும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- விவசாயிகள் அட்டைகள் மூலம் பெறுவதற்கான கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.