பழனி முருகன் கோயிலில் காப்புக் கட்டுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா! - dindigul news in tamil
🎬 Watch Now: Feature Video
Published : Nov 14, 2023, 8:11 AM IST
திண்டுக்கல்: பழனி முருகன் மலைக்கோயில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பானதாகும். இந்நிலையில் நேற்று (நவ.13) மதியம் 12 மணிக்கு காப்புக் கட்டுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. மூலவர் முருகப் பெருமானுக்கும், வேலும், மயிலும், துவார பாலகர்கள், விநாயகர், சண்முகர் வள்ளி தெய்வானை, ஆகியோருக்கும் மஞ்சள் நிறக்கயிறு காப்பு கட்டப்பட்டது.
பின்பு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில், தங்கள் கைகளில் மஞ்சள் நிறக் கயிறை, காப்பு கட்டாக கட்டிக் கொண்டு, கந்த சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்தனர்.
இத்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 18ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனால் அன்று மதியம் 1.30 மணிக்கு சாய்ரஜ பூஜை நடைபெறுகிறது. 2.45 மணிக்கு சூரர்களை வதம் செய்ய, முருகப்பெருமான் மலைகொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்பு கோயில் நடை சாத்தப்படுகிறது.
பின்பு 6 மணி அளவில் சூரசம்ஹாரம் தொடங்குகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் சூரர்களை அழித்த முருகப் பெருமானுக்கு, வெற்றி விழா நடைபெறுகிறது. நவம்பர் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, பழனி முருகன் மலைக் கோயிலில், முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.