மதுரை: மேலூரில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்க திட்டம் ஒன்றிய அரசால் முழுவதும் ரத்து செய்யப்பட்டதாக நேற்று நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்த நிலையில், பொதுமக்கள் இதனை வரவேற்று வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் தான் மக்கள் தாங்கள் 60 தினங்கள் கழித்து நிம்மதியாக உறங்கினோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலூர் வட்டத்தில் நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனத்திற்கு இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியான நிலையில், மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டங்ஸ்டன் போராட்டம்
இந்நிலையில் ஜனவரி 7-ஆம் தேதி மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக திரண்டு வந்து மதுரையை ஸ்தம்பிக்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டங்கள் பல்வேறு வகையிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு தொல்லியல் மண்டலமாகவும், பெரியாறு பாசனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து மக்கள் போராட்டங்களில் வலியுறுத்தி வந்தனர்.
இந்த சூழலில், தமிழ்நாடு பா.ஜ.க., சார்பில், மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அ. வல்லாளப்பட்டி சேர்ந்த மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், அரிட்டாபட்டியைச் சேர்ந்த முருகேசன், கிடாரிப்பட்டியைச் சேர்ந்த முத்துவீரனன் அம்பலம், தெற்கு தெருவை சேர்ந்த சாமிக்கண்ணு, நரசிங்கம்பட்டியை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் அடங்கிய குழுவினரை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அணுகினார்.
சுரங்க ஏலம் ரத்து
தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் மகா சுசீந்திரன், பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், ராஜசிம்மன், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர், விவசாயிகளுடன் டெல்லியில் உள்ள ஒன்றிய நிலக்கரி, சுரங்கம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டியின் அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்து டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. “நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வர விடமாட்டோம்,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்திருந்தார். இது தொடர்பான தீர்மானமும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: "நாயக்கர் மன்னர்கள் காலத்திலேயே அரிட்டாபட்டி மக்கள் அப்படி தான்".. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் பெருமிதம்!
இதனையடுத்து நேற்று (ஜனவரி 23) மாலை, மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் நாயக்கர்பட்டி தொகுதிக்குட்பட்ட 5,000 ஏக்கர் பரப்பளவிலான டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை முழுவதும் ரத்து செய்வதாக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்தார். இதனை நாயக்கப்பட்டி பகுதி கிராம மக்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.
எழுத்து பூர்வமாக கடிதம் வேண்டும்
இதுகுறித்து பேசிய மாங்குளம் மீனாட்சிபுரம் காலனியைச் சேர்ந்த புலியம்மாள், “இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்திய கம்பூர் செல்வராஜ் உள்ளிட்டவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக ஜனவரி 7ஆம் தேதி மதுரைக்கு பேரணியாக சென்று எங்கள் கோரிக்கையை மிகுந்த நிதானத்தோடும் ஒழுக்கத்தோடும் வலியுறுத்தினோம். தற்போது மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோன்று இதனை எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு வழங்க வேண்டும்,” என்று தன் கோரிக்கையையும் முன் வைத்தார்.
அதே ஊரைச் சேர்ந்த விஜயா என்ற பெண்மணி, “மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது மட்டுமின்றி இனி எப்போதும் டங்ஸ்டன் சுரங்க திட்டம் செயல்படுத்தப்படாது என்பதை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்தால் நாங்கள் முழுவதும் வரவேற்போம்,” என்றார்.
கண்ணன் என்பவர் பேசுகையில், இந்த மண்ணை நம்பி தான் இங்கு விவசாய பணி முழுவதுமாக நடைபெற்று வருகிறது. எங்களுக்கு விவசாயம் மட்டுமே முதுகெலும்பாகும் என்று தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டமே இவ்வளவு பெரிய வெற்றி பெற்றுத் தந்துள்ளது. உண்மையிலேயே நேற்றுதான் நாங்கள் நிம்மதியாக உறங்கினோம் என்றார்.
நிம்மதியான உறக்கம்
அரிட்டப்பட்டியைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்மணி கூறுகையில், “கடந்த இரண்டரை மாதங்களாக நடைபெற்ற போராட்டம் நேற்றோடு முடிவுக்கு வந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு நல்ல தீர்வை கொடுத்துள்ளன. நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
பிரதமர் மோடிக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் ஊரில் உள்ள வயதான பெண்மணிகள் நான் இந்த ஊரில் தான் இறப்பேனா என்றெல்லாம் என்னிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசி இருந்தார்கள்.
அவர்களும் சரி; நாங்களும் சரி நிம்மதியான உறக்கத்தை நேற்று அனுபவித்தோம் என்பதுதான் உண்மை. எங்களுக்காக போராடிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம்,” என்று தெரிவித்தார்.