தஞ்சாவூர்: அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை அதிமுக கட்சி நிர்வாகிகள், அதிமுக உரிமை மீட்பு குழு மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக இன்று கொண்டாடினர்.
தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் இருந்து பேண்ட் வாத்தியங்கள் இசைக்க கரும்பு, இனிப்பு வகைகள், சாக்லேட், வாழைப்பழம், தர்பூசணி, பூசணிக்காய் ஆகியவற்றுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து, தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள ஜெயலலிதா உருவச்சிலை பீடத்திற்கு கீழே அவற்றை வைத்து வணங்கினர்.
இதைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் அன்னதானமும் வழங்கப்பட்டது, இதில் ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக அவர்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
இதையும் படிங்க:ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்காதது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்!
இதைப்போல் தஞ்சை தெற்கு வீதி பகுதியில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார், இதில் அதிமுக மாநகர செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக கட்சி சார்பில் தஞ்சாவூரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன,
மேலும் அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் நிர்வாகிகள் தவமணி (காவல் துறை - ஓய்வு) , கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் ரயிலடியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து கோஷமிட்டனர்.