சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் கூறியதாக சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரியார் அமைப்புகள் சீமானுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன.
இதையடுத்து சீமான் கூறிய கருத்திற்கு ஆதாரம் கேட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட 30-க்கும் மேற்பட்ட பெரியார் அமைப்புகள் மற்றும் மே 17 இயக்கம் சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சீமான் உருவப்படத்தை எரித்தும் அவரது உருவப்படத்தை இழிவுபடுத்தியும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்து மூலம் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
முன்னதாக முற்றுகையிட வருவதை அறிந்து அவர் கட்சி தொண்டர்கள் கையில் கட்டையுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரது வீட்டின் முன்பு குவிந்திருந்தனர். அவர்கள் கட்டையுடன் குவிந்து இருந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தநிலையில் சீமான் வீட்டு முன்பு சட்டவிரோதமாக கையில் கட்டையுடன் குவிந்திருந்த 150 ஆண்கள் 30 பெண்கள் மீது நான்கு பிரிவின் கீழ் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. BNS 189 சட்டவிரோதமாக கூடுதல், 126 தடுத்தல், 351 மிரட்டல், மாநகர காவல் சட்டம் (41) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் சென்னை நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே சீமான் வீட்டின் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் இயக்கங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் சீமானுக்கு ஆதரவாக அவர்கள் வீட்டின் முன்பு கட்டையுடன் கூடி இருந்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.