திண்டுக்கல்: 8 மணி நேரம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி ஆட்சியரிடம் மனு!
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆகவே பிற மாவட்டங்களில் நடைபெறுவது போல் திண்டுக்கல்லிலும் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வேண்டும் என்றும், 750 காளைகள் வரை அவிழ்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும்,
ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கும் காளை வளர்ப்போருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் நுழைவுச்சீட்டினை ஆன்லைன் மூலம் வழங்கும் முறையை மாற்றி, கால்நடை பராமரிப்புத் துறை ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு நடத்தும் ஊர் விழா கமிட்டி சார்பில் அனுமதிச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி நேற்று (ஜன 3) திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் மனு அளிக்கப்பட்டது.
பில்லம நாயக்கன்பட்டி, கொசவபட்டி, மறவப்பட்டி, உலகம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்பவர்கள் என 50க்கும் மேற்பட்டோர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து தாங்கள் கையெழுத்திட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் வழங்கினர்.