கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கடும் போராட்டம் - ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் அறிவிப்பு - சென்னை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள்
🎬 Watch Now: Feature Video
சென்னை: ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் அரசினை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு எப்பொழுதும் தயங்க மாட்டோம் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் 2023 - 24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்பட்டது.
அந்த நிதிநிலை அறிக்கையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோ-வின் ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ், நேரு, முருகையன் ஆகியோர் கூறும் பொழுது, “ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படுவதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியம் திட்டம், தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கான நிரந்தரப் பணியிடம் வழங்குதல் உள்ளிட்ட எவ்வித கோரிக்கையும் அறிவிப்பில் இல்லை. ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஏற்கனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் அரசுக்கு எதிரான தீவிரப் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தனர். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எந்த கட்சியும் சேர்ந்தவர்கள் இல்லை எனவும்; தங்களின் கோரிக்கைக்காக தொடர் தீவிர போராட்டத்தை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊழியர்களின் சலுகையைப் பறித்ததால் வருவாயில் பற்றாக்குறை குறைவு: தலைமைச்செயலக சங்கத்தினர் அதிர்ச்சி