புதுடெல்லி: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரிட்டாப்பட்டி பல்லுயிர் மண்டல பாதுகாப்பை கருத்தில் கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்க ஏலம்
மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. மேலும், அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தகவல் வெளியானது.
ஸ்தம்பித்த மதுரை!
இந்நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக திரண்டு வந்து மதுரையை ஸ்தம்பிக்க வைத்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 9-ம் தேதி தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது. ஆனால் அதற்கு பிறகு மத்திய அரசு, தமிழ்நாடு அரசால் 'பல்லுயிர்ச் சூழல் மண்டலமாக' அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டிக்கு உட்பட்ட 500 ஏக்கரைத் தவிர்த்து, பிற இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தது.
வலுத்த எதிர்ப்பு
இது அரிட்டாபட்டி, கேசம்பட்டி, சின்ன கற்பூரம்பட்டி, தெற்குத்தெரு, தும்பைப்பட்டி, கம்பூர் உள்ளிட்ட பகுதி மக்களை கடுமையாக சீண்டியது. இந்நிலையில், '' கனிமச் சுரங்கம் அமையும் முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த பகுதியை மோத்தமாக 'பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு வேளாண் மண்டலமாக' அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். மேலும், மேலூர் வணிக கடையடைப்புப் போராட்டங்களை நடத்தினர்.
அமைச்சரை சந்தித்த விவசாயிகள் குழு
இந்நிலையில் தமிழக பாஜக சார்பாக, மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அடங்கிய குழுவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், நேற்று (ஜன.22) புதுடெல்லியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை வைத்தனர்.
அமைச்சரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். இருப்பினும், அரிட்டாபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆறுதல் அடையவில்லை. திட்டம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கிஷண் ரெட்டி அறிவித்திருந்தால் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். மாறாக, அண்ணாமலை அறிவித்திருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றனர்.
மத்திய அரசு அறிவிப்பு
இந்நிலையில், மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அடங்கிய குழுவினர் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி மையமான பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளம் மற்றும் ஏராளமான காலாச்சார பாரம்பரிய தளங்கள் அடங்கியுள்ளதாக அந்த குழுவினர் தெரிவித்தனர். எனவே, பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதை கருத்தில் கொண்டு மதுரை நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலம் ரத்து செய்யப்படுகிறது'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.