சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற சமயங்களில் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தை ஏற்பாடு செய்வார். அதன்படி வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தையொட்டி தேநீர் விருந்தை ஆளுநர் ஆர் என் ரவி ஏற்பாடு செய்துள்ளார்.
காங்கிரஸ் புறக்கணிப்பு
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சமூகவலைதளம் மூலமாக அறிவித்திருந்தார். அதில், "ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை. சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். இவரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்" என பதிவிட்டிருந்தார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு
இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆளுநர் ஆர் என் ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும் கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கின்ற தகுதியை இழந்துவிட்டார். ஆகவே ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பதாக" அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் புறக்கணித்துள்ளது. விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓவ்வொரு ஆண்டும் நாடு விடுதலை நாளான ஆகஸ்டு 15 மற்றும் குடியரசு நாளான சனவரி 26 ஆகிய நாட்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், மேதகு ஆளுநர் அவர்கள் அனைத்துக்கட்சித் தலைவர்கள் மற்றும் உயர் அலுவர்கள் ஆகியோருக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். அவ்வாறு வழங்கப்பட்டு வரும் தேநீர் விருந்தில் எமது கட்சியின் சார்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தே வந்திருக்கின்றோம். காரணம் தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வருகின்றவர்கள் மாநில சுயாட்சி நிலைப்பாட்டிற்கும், இருமொழி கொள்கைக்கும் எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, ஏற்கனவே மேதகு ஆளுநராகவிருந்த பன்வாரிலால் புரோகித் அவர்களும் தற்போதைய ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களும் சனாதனக் கொள்கைகளை அரசின் நடைமுறையாக செயல்படுத்துவதற்கு முயன்றவர்கள் ஆவார்கள். அத்துடன், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் தொன்மைகளையும் காவிமயமாக்குவதற்கு முயன்றவர்கள் ஆவார்கள். ஆகவே, மக்களின் நலன் கருதி கொள்கை அளவில் மேதகு ஆளுநர் அவர்களோடு முரண் நடவடிக்கைகளில் தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் ஈடுபட்டு வருவதால், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தோம்பலை புறக்கணித்தே வந்திருக்கின்றோம். அதைப் போலவே இவ்வாண்டும் புறக்கணிக்கின்றோம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ் கட்சி
இதே இந்திய கம்யூனிஸ் கட்சியும் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரின் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த முறையும் ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை திமுக கூட்டணிகள் புறக்கணித்தன.