கோயம்புத்தூர்: திமுக ஆட்சியை அகற்றும் நோக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் எனவும், அவரது இந்தப் பயணம் கோவையில் இருந்து விரைவில் துவங்க உள்ளதாகவும் அக்கட்சியின் கொறடாவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செயல்வீரர் கூட்டம் , கட்சியின் கொறாடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, "திமுக ஆட்சியை அகற்ற, மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணம் கோவையில் இருந்து விரைவில் துவங்க உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.
"ஈபிஎஸ் வரும் 30 ஆம் தேதி கோவைக்கு வருகிறார் எனவும், பிப்ரவரி 9 ஆம் தேதி திருப்பூர் விவசாயிகள் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்" என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
"அதிமுகவை விட பெரிய கட்சி தமிழகத்தில் இல்லை என்று பேசிய முன்னாள் அமைச்சர், திமுக ஒருமுறை ஆட்சியில் இருந்தால் அடுத்த தோல்விதான் எனவும், அதிமுக ஒருமுறை ஆட்சியில் இல்லாமல் இருந்தால் அடுத்து மீண்டும் அதிமுக ஆட்சிதான்" என்றும் கூறினார்.
முன்னதாக, இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரபல ரத்தின விநாயகர் கோவிலில் இருந்து ஜனவரி 31 ஆம் தேதி மாலை 3 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தமது சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளார்" என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை கேட்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்தி நிிலையில், அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயேே, எடப்பாடி பழனிசாிமியின் சுற்றுப்பயணம் சற்று தள்ளிப்போவதாக எஸ்.பி.வேலுமணியே செயல்வீரர்கள் கூட்டத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தல் தான் தமது இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்வைத்து தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.