இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறல்; 5 இலங்கை மீனவர்கள் தூத்துக்குடியில் கைது
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் 'வஜ்ரா' என்ற ரோந்து கப்பலில் நேற்று (மே 22) மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் 60 மைல் நாட்டிகல் தூரம் இலங்கையைச் சேர்ந்த படகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து உடனடியாக, கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, அந்தப் படகை மடக்கிப் பிடித்தனர். அப்போது, IMUL A-0635-NBO என்ற படகில் இலங்கை நீர்கொழும்பைச் சேர்ந்த விக்டர் இம்மானுவேல், ரஞ்சித், ஆண்டனி ஜெயராஜ் குரூஸ், பெனில் மற்றும் படகு ஓட்டுநர் ஆனந்தகுமார் ஆகிய 5 மீனவர்கள் இருந்தனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 5 இலங்கை மீனவர்களையும் கைது செய்து, அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். படகையும், 6 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் தங்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி, தருவைகுளம் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், கடலோர காவல் குழும டிஎஸ்பி பிரதாபன் தலைமையிலான போலீசார், மற்றும் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இது தொடர்பாக தருவைகுளம் கடலோர பாதுகாப்புப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்களையும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என காவல்துறையினர் தெரிவித்தனா்.