Coimbatore: கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்! - Coimbatore district
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவை பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இம்முகாமில் இரத்த பரிசோதனைகள், ECG, ECO, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, எலும்பு சார்ந்த பரிசோதனைகள், பொது மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான பதிவும் செய்யப்பட்டது.
மற்றொரு நிகழ்வாக கோவை மாவட்ட நிர்வாகம், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசு அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டத்தைத் துவங்கி உள்ளது. அதன் துவக்க நிகழ்ச்சி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்தில் கோவை மாவட்ட நிர்வாகம், ஹெல்பிங் ஹாட்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனம், புரோபெல் தனியார் அமைப்பு ஆகியவை இணைந்து அரசு அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வீட்டில் உபயோகம் இல்லாமல் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை சேகரித்து வழங்குவர்.
இதில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் கலந்துகொண்டு இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தனியார் தொண்டு அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.