ஒரே பைக்கில் பயணம் செய்த 5 மாணவர்கள்; இம்போசிஷன் எழுத சொல்லி நூதன தண்டனை அளித்த போலீஸ்! - பழனி காவல் நிலையம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: பழனி நகரில் ஆர்.எப் ரோடு, திண்டுக்கல் ரோடு, புதுதாராபுரம் ரோடு ஆகியவை போக்குவரத்து அதிகமுள்ள சாலைகள் ஆகும். கடந்த சில நாட்களாக இந்த சாலைகளில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் அதிவேகமாக மோட்டார் வாகனங்களில் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 2ஆம் தேதி) பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காலேஜ்மேடு பகுதியில் ஒரு மோட்டார் வாகனத்தில் 5 பேர் பயணித்த வண்ணம் சென்றனர். அதை அடுத்து போலீசார், அவர்கள் வந்த இரு சக்கர மோட்டார் வாகனத்தை மறித்தனர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.
பின்னர் அந்த 5 பேரையும் போலீசார் பழனி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதனை அடுத்து அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் நூதன தண்டனை வழங்கினார். என்ன அந்த தண்டனை என்றால் “இனிமேல் சாலை விதியை மீறி மோட்டார் சைக்கிளில் செல்ல மாட்டேன்” என 100 முறை ஒரு தாளில் எழுத உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் ஐந்து பேரும் தாளில் எழுதினர். தொடர்ந்து மாணவர்களுக்கு, சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியம், விபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்து எச்சரித்து அனுப்பினார். போலீஸ், வாத்தியாராக மாறி நூதன தண்டனை வழங்கிய செயல் வரவேற்பை பெற்று உள்ளது.