கொடைக்கானலில் சேலைகளால் வேலி அமைக்கும் விவசாயிகள்! - மன்னவனூர்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் என்ற பெயரைக் கேட்டாலே, நமது மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி பிறக்கும். பசுமை நிறைந்த புல் பரப்பைக் கண்டதும் திடீரென வீசும் தென்றலின் நடுவே மனம்கொண்ட கவலைகளும் பறந்தே போகும்.
கொடைக்கானலில் மேல்மலை கிராமங்கள், கீழ்மலைக் கிராமங்கள் என பல உள்ளன. அங்கு அதிக அளவில் விவசாயத்தையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்கள் வெள்ளைப்பூண்டு, பீன்ஸ், கேரட், அவரை, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளைப் பயிரிட்டு வருகின்றனர். மலைக் கிராமங்களான பூம்பாறை, பள்ளங்கி, வில்பட்டி, பேத்துப்பாறை, கோம்பை, மன்னவனூர், பூண்டி செண்பகனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த விவசாயமே பிராதன தொழிலாக இருக்கிறது. கொடைக்கானல் மலையில் விளைந்த காய்கறிகள் என்பதாலோ என்னவோ, இங்கு விளையும் காய்கறிகள் உள்ளிட்டவைகளுக்கு நல்ல மருத்துவக்குணம் உள்ளதாகவும், ஆரோக்கியம் தரக்கூடியது எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, வனவிலங்குகளால் ஏற்படுத்தும் பாதிப்புகளை தவிர்க்க இங்குள்ள விவசாயிகள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்காக சோலார் மின்வேலிகள், இரும்பு வேலிகள் உள்ளிட்டவற்றை அமைத்த போதும் வனவிலங்குள் தொல்லை நீங்கிய பாடில்லை.
இதனால், எத்தனையோ பல கஷ்டங்களுக்கு நடுவே இருந்தாலும், விவசாயத்தைக் கைவிடாமல் பாதுகாக்கப் போராடும் இந்த விவசாயிகள் இதன்மூலம் தங்களுக்கான வாழ்வாதாரத்தை ஈட்டிவருகின்றனர். அவ்வப்போது வனவிலங்குகளால் தொல்லையைத் தடுக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் விவசாய நிலங்களைச் சுற்றி புடவைகளைக் கொண்டு கட்டிய போதும், வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க முடியவில்லை என்று வருந்துகின்றனர். இதனால், பல இன்னலுக்கு ஆளாகி நஷ்டத்தில் உள்ள தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.