கோவையில் தலையில் தேசியக் கொடி மற்றும் திமுக கொடி கட்டிக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பம்! என்ன காரணம்?
🎬 Watch Now: Feature Video
Published : Nov 27, 2023, 3:26 PM IST
கோயம்புத்தூர் : தலையில் தேசியக் கொடியையும், திமுக கட்சி கொடியையும் கட்டிக் கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் தவுலத். இவருக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் எட்டரை ஏக்கர் அளவில் நிலம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தை தனக்கு தெரியாமல் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்கு தனது உறவினர்கள் விற்று விட்டதாகவும், தனக்கு அதில் பங்கு தரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டு மனு அளித்துள்ளார். ஆனால் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறுகிறார். இந்நிலையில் மீண்டும் இன்று (நவ. 27) தனது குடும்பத்தினருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார்.
அப்போது குடும்பத்தை சேர்ந்த பெண், தனது தலையில் தேசிய கொடியை கட்டிக்கொண்டும், அவரது உறவினர்கள் திமுக கொடியை கட்டிக்கொண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பெண் கூறுகையில் தாங்களும் திமுக கட்சியை சேர்ந்தவர்தான் எனவும் தனக்குத் தெரியாமலேயே திமுக பிரமுகர் தனது நிலத்தை அபகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்களே ஏமாற்றி உள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில் அவர்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருந்தபோதும், அவர்கள் சாலை மறியலை கைவிடாததால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.