கோவை அருகே கிணற்றில் விழுந்த யானை: பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு..! - elephant rescued that fell in well in coimbatore
🎬 Watch Now: Feature Video
Published : Dec 23, 2023, 10:01 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், ஆனைக்கட்டி அடுத்துள்ள வனப்பகுதியில் நேற்று (டிச.22) இரவு கேரளா வனப்பகுதிக்கு ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் சென்றுள்ளது. இந்நிலையில் அந்த யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. அப்போது யானைக்கூட்டத்தில் சுமார் 18 வயது மதிக்கத்தக்க இருந்த ஆண் யானை ஒன்று 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
இதனையடுத்து உடன் வந்த யானைகள் தவறிவிழுந்த யானையைக் காப்பாற்றத் தொடர்ந்து பிளிறியபடியே அங்கு நின்றுள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து புதூர் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது தண்ணீர் உள்ள கிணற்றில் யானை ஒன்று விழுந்ததை உறுதி செய்தனர்.
இரவு நேரம் என்பதாலும் தண்ணீர் அதிகமாக இருந்ததாலும் காலையில் மீட்புப் பணியைத் துவங்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இன்று(டிச.23) காலை முதல் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணித் தொடங்கியது. ஜேசிபி உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டில் தோண்டப்பட்டு சுமார் 15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கிணற்றில் விழுந்த யானை மீட்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "தற்போது யானைகளின் வலசை செல்லும் காலம் துவங்கியுள்ளதால், கேரளா வனப்பகுதியிலிருந்தும் தமிழ்நாடு வனப்பகுதியிலிருந்தும் ஏராளமான யானைகள் இடம் பெயர்ந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று(டிச.22) இரவு கூட்டத்துடன் சென்ற ஆண் யானை தவறி கிணற்றுக்குள் விழுந்தது.
இதனையடுத்து உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, ஜேசிபி உதவியுடன் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, யானை வெளியேற்றப்பட்டது. தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்ததால் யானைக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் ஒரு குழுவினர் யானையைக் கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளனர்.