எங்களுக்கும் தும்பிக்'கை' இருக்கு.. அடிகுழாயில் அடித்து நீர் அருந்திய யானை! - Andhra news in tamil
🎬 Watch Now: Feature Video
ஆந்திரா: தற்போது கோடை காலம் நிலவி வருவதால், வனப் பகுதிகளில் இருந்து வன விலங்குகள் எதுவும் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையக் கூடாது என்பதற்காக, வனத் துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், வன விலங்குகளின் தேவைகள் இன்னும் பூர்த்தி அடையவில்லை என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் தெரிகிறது. ஏனென்றால், யானை ஒன்று ஊர்ப்பகுதிக்கு வந்து அடிகுழாயில் தண்ணீரை அடித்து குடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்தின் கோமரடா மண்டல் பகுதியில் உள்ள வன்னம் என்ற கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்பு சில யானைகள் வந்துள்ளன. அதில், ஒரு யானைக்கு தாகம் எடுத்துள்ளது. அப்போது அருகில் இருந்த அடிகுழாயில், ஒருவர் தண்ணீர் அடித்து எடுத்துச்செல்வதை யானை பார்த்துள்ளது. இதனையடுத்து, நிகழ்வை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்ட யானை, அடிகுழாயின் அருகில் சென்றுள்ளது.
பின்னர், தனது தும்பிக்கையால் அடிகுழாயை அடித்து, அதில் வரும் தண்ணீரை தும்பிக்கையால் கோதி தனது தாகத்தை தீர்த்துள்ளது. இந்த உணர்வுப் பூர்வமான யானையின் செயலை, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.