Audio leaks: "அனைத்து டெண்டர்களுக்கும் 1% கமிஷன்" பாப்பிரெட்டிப்பட்டி பிடிஓ வீட்டில் திடீர் ரெய்டு.. பின்னணி என்ன? - pappireddipatti dharmapuri
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18685645-thumbnail-16x9-paapireddipattybdo.jpg)
தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராகக் கிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டில் இன்று (ஜூன் 6) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, ஒப்பந்தப்புள்ளிக்கு ஒரு சதவீத கமிஷன் கேட்பதாகத் தகவல் வெளியானது.
இதனையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் உண்ணாமலையை ஈடிவி பாரத் தமிழ்நாடு தருமபுரி செய்தியாளர், தொடர்பு கொண்டு பேசிய போது, "பொது நிதியில் 6 லட்சம் ரூபாய் என்றால் 10 லட்சமாக வைத்துத் தர சொல்கிறார். 30 ஆயிரம் ரூபாய் அளவிலான வேலை நடைபெறுவதாக இருந்தால் கூட லஞ்சம் கேட்கிறார்.
பணி முடிந்து பணம் பெறுவதற்கு, அவருக்குப் பணம் கொடுத்தால் மட்டுமே கையொப்பம் இடுகிறார். இல்லையென்றால் இரண்டு வார அளவிற்குக் காலம் தாழ்த்தி வருகிறார். தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் கோப்புக்கள் எனக்கு வரவில்லை என்று சொல்கிறார். மற்ற அதிகாரியிடம் கேட்டால் பிடிஓ மேசையில்தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, அனைத்து வேலைகளுக்கும் ஒரு சதவீதம் கமிஷன் கேட்பதாகவும், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியாக இருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வேலை நடைபெற்றாலும், தனக்குக் காசு கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று தெரிவிப்பதாகவும் உண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் தருமபுரி மாவட்ட ஆட்சியரும், சென்னை அறிவியல் நகரத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வரும் மலர்விழி ஐஏஎஸ் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக கயல்விழி உள்பட 3 பேருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.